பெயர் சூட்டு

குறிஞ்சிக்கோ திருமகளின் அகமகிழ

சேவற்கொடித் தலைமகனாம், நித்தம்திருச்-

செந்தூரன் பாதம்தொழும் அலைபோல

வற்றாத உளமகிழும் சீர்வாழ்வை

முற்றாகப் பெற்றிடவே, முடிசூடி

கரிமேலே இனங்காக்கும், தமிழ்வேந்தன்

பெயர்தாங்கும் செந்தூர்வேலே வாழ்க…


-ஆரன் 22.02.2021

( தோழியின் மகனுக்கு பெயர் வைத்ததற்கு எழுதியது )


நண்பருக்காக

 மாதங்களில் நோன்பிருந்து

புத்தகநீர் அருந்திடுவாய் !

கண்களிலே உலகருந்தி

பயணப்பசித் தீர்த்திடுவாய்!

பெற்றவையும், கற்றவையும்

பின்வாழ்வில் தெம்பளிக்கும்!

சிவா சிவா எனக்கேட்டால்

வாசி வாசி என்ரொலிக்கும்!

முதலெழுத்துத் தந்தவரே

நலம்வாழ விழைகின்றோம்!

எக்காலும் நின்பெயரை

அழுக்காறு இல்லாமல்!

கடையெழுத்தில் பெருமைப்பட

முக்காலும் முயல்கின்றோம்!


-ஆரன் 12.01.2021

( நண்பருடைய மகளும் மகனும் அவர்கள் தந்தை பிறந்த நாளுக்காகக் கேட்டக் கவிதை )

நண்பர் மகனுக்கு

 மாயன்குல மரிக்கொழுந்தே

வானுயர்வாய் சிவக்கொழுந்தே

மழலைக்குணம் பிரியா அகிலனே

பர்வதத்தைக் குளிர்விக்கும் முகிலனே

விளைமண்ணே! கலைக்கண்ணே!!

வாழ்க நீ பல்லாண்டு…


-ஆரன் 18.12.2020

( நண்பர் மகன் பிறந்த நாளுக்கு எழுதியக் கவிதை )

மனைவிக்கு

 பன்னீர்ப் பூவே

நன்னீர்த் தீவே

கோகிலத்துப் பாவே

மலைமேகக் காவே

சிற்றின்ப நிறையே

பேரின்பச் சிறையே

பனிதாங்கா உளமே

உளிதாங்கும் திடமே

தாலாட்டு நாளின்று

வாழ்வாங்கு வாழ்ந்திடவே

உன்பாதி சேய்களுடன்

இயற்கையன்னை உடனிருப்பாள்

இறுதிவரை இன்புறவே…


-ஆரன் 02.12.2020

 ( மனைவி பிறந்த நாளுக்கு எழுதிய கவிதை )          

நண்பர் மகளுக்கு

மலரும் மலர நாணும் மலர்

நீ மலர்ந்த நாள் முதல்

மலரே மலர்ந்த நாள் வாழ்த்துகள்.


-ஆரன் 07.10.2020


விலையில்லா ஓவியமே

பிழையில்லா காவியமே

ஈடில்லாப் பெருவரமே

கலையெல்லாம் கைவருமே

கார்த்திகையின் ஒளிச்சுடரே

பார் புகழ வாழ்ந்திடுவாய்…


-ஆரன் 30.11.2020

( நண்பர் மகளுக்கு பிறந்த நாள் கவிதை )


மகனுக்கு


 அரும்பியக்கதிர் நன்னாளில்

ஆல்விழுதாய் வேர்ப்பரவி

இன்முகத்துக் கர்ணனவன்

ஈரெட்டும் பெற்றிருக்க

உரைகேளாய் வாழ்த்துடனே

ஊழல்வெறு மெய்யாள

எறும்புடனே போட்டியிடு

ஏறியவழி இளைப்பில்லை

ஐந்தினையும் சென்றுவிடு

ஒன்றினைநல் நட்புடனே

ஓய்வில்லை கற்பதற்கே

ஒளவியமும் விலகிடவே….


-ஆரன் 15.10.2020

( மகன் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கவிதை )

ஆறுதல்


 மலையரசி தந்தமகள்

மனந்தெளியும் காலமிது

ஞாலம்நின் பேருரைக்கும்

தலைநகரில் நட்டதமிழ்-

செல்வமகன் உடனிருக்க

சேர்த்தகனா நாள்வருமே

உன்னுயரம் நீயறிவாய்

துயரெல்லாம் காலடியே

பிறரறியா உன்சிந்தை

சிந்துநதி பாய்ந்திடுமே

நித்தம் தனையாழும்

மாரிகுல பெண்மணியே…


-ஆரன் 17.09.2020

(டெல்லி நண்பர் மறைவுக்கு அவர் மனைவிக்கு எழுதிய கவிதை )

வாழ்த்துக் கவிதை

 சிவன் தனையினை பிரியா திருந்தங்கையிட

மறியாதழல் உனைப்பைந் தமிழாய் ஏந்திய என்கை

வெப்பந் தனியா திரும்முன்னே, குமரன்விழி விரிந்தவண்ணம்

வளர்புவியாழு பவர்த்தினி ஓ வியந் தன்னை.


-ஆரன் 14.09.2020

( நண்பன் மகள் எனக்களித்த ஓவியத்திற்கு வாழ்த்துக் கவிதை )

முதல் கவிதை


 அன்னைத் தமிழெடுத்து

கன்னித் தமிழ்ப்பிரித்து

அன்னை தனைநினைத்து

கன்னல்க் கவிபடைத்த

தமிழ்ச் செல்விமகள்

வாழியவே…


-ஆரன் 12.08.2020

( மகள் தாய்க்கு எழுதிய கடிதத்திற்கு வாழ்த்துக் கவிதை )

மகளுக்கு


மூவேழில் அடிதுவக்கும்

முன்தவத்தின் நற்பயனே

பெண்ணுருவில் என்னுருவே

பின்னேறும் இளையோரை

முன்னேராய் வழிநடத்தி

வாழ்வுதனில் முன்னேற

வாசல்மழை வாசனைபோல்

ஆழ்மனதை ஊடுருவும்

இணையில்லா தமிழ்போல

பேரின்ப வாழ்வுதனை

சீரோடு வாழ்ந்திடவே

வாழ்கவென வாழ்த்துகிறேன்.


-ஆரன் 16.09.2020

( மகளுக்கு  பிறந்த நாள் வாழ்த்துக் கவிதை )

ஜோதீ


 உச்சிக்குழி மேலவச்ச

எரிமலையின் குழம்புருக

நெஞ்சுக்குழி தாங்கருகும்

சன்னவொலி கேட்க்கலையா?

 

தேகமது வழுவிழந்து

இறுதிவரும் ஈனவொலி

நீர்நிலையில் அமிழ்கிறதே

நடுசாமம் கேட்கலையா?

 

சீராட்டி வளர்த்தசொந்தம்

சிலையாக நின்றிருக்கு

பெத்தஉண்டி வெப்பத்திலே

பிள்ளைக்கறி வெந்திருக்கு.

 

உங்கமனு நீதியால

கூறுபோட்டு வச்சிருங்க

மேட்டினத்து ஓநாய்கள்

பசியார சொல்லிருங்க.

 

ஒப்பறியா சட்டமிடும்

சேவகனே சொல்லிருங்க

எந்த தரசோதனையில்

என்னையாள வந்தீங்க.

 

உன்னச்சொல்லி குத்தமில்ல

எங்ககுடி சுத்தமில்ல

அரசியலும் புரிவதில்ல

அடியாழம் தெரிவதில்ல.

 

பனம்பழத்த தாம்பறிக்க

தென்னையில ஏறிநிக்கும்

வண்ண உடைக்கேட்டவர

வெள்ளாடை போடச்சொல்லும்.

 

வழிதெரியா கானகத்தில்

ஒளியறியா பாலகரை

ஒலிவழியே போகச்சொன்னா

போகுமிடம் ஏதுகரை.

 

குன்றுமுடி சென்றிடவே

நூலிழையார்க்கொரு நாழி

ஒய்யாரப் படியேரும்

கொண்டவர்க்கு ஒருநாழி.

 

இவ்வாறு வேற்றுமைகள்

சாத்திரங்கள் கூறக்கண்டு

அவ்வாறே தந்திருவார்

மலையேர ஒருநாழி.

 

என்சொல்லி என்னபயன்

மாண்டதளிர் மீண்டிடுமா.

இனிமேலும் இதுவேண்டா

வழுவறிந்துப் பங்கிடடா.

 

ஐயனது வாக்கினையே

ஒருபோதும் செவிகேளார்

அண்ணல்களின் வார்த்தையையா?...


-ஆரன் 18.09.2020

( நீட் – தரத் தேர்வால் மாண்ட தளிர் ஜோதிக்காக கவிதை )

அனல் மழை


 

மயிலாடும் குயில்ச்சோலை மண்ணுடையார்ச் சிறுகூட்டில்

பள்ளிமனம் மாறாது மணிமணியாய் வளர்த்தவளே

பெற்றமனம் நெஞ்சுகனம் பெருமூச்சாய் இளகிடவே

தேரில்வந்த மன்மதனை கண்மூடி மணங்கொள்ள.

 

கொண்டவாழ்வு சாட்சியமாய் ஊர்மெச்சும் கண்மணிகள்

வெள்ளி விலைபேசிடவே குறைவற்ற பொன்மணிகள்

நின்னறிவை போற்றிடுவர் ஊராரும் தமிழ்மகளே

திறனறிந்து அறியவில்லை என்னாலும் உந்தனிணை.

 

பேரின்ப நெடுவாழ்வில் நெஞ்சமெல்லாம் நெருப்பெரிய

கொள்ளைபசி கொண்டவரின் கோரமுகம் வாட்டிடுதே

பெருங்காயம் பட்டிடுமா மன்மதனும் அம்பெறிந்தே?

பாசவலை வீசிநிற்க பாசிமட்டும் மிஞ்சிடுதே.

 

எவ்வாறு சுமந்திடுவாய் மனச்சுமையை நெடுங்காலம்

மக்கள்கூட வாழ்ந்திடுவர் பிழையில்லை நிகழ்காலம்

கைவீசும் உற்றாரை எங்கனம்நீ இகழ்ந்திடுவாய்

அவரவர்க்குத் தலைச்சுமைகள் மேல்நோக்கு புரிந்திடுவாய்.

 

மேற்கினிலே தவறவிட்ட கதிரவன மலைவிழுங்கும்

களங்காதே திரும்பிநட விடிவெள்ளி கிழக்கிலெழும்

பேரன்பால் நதியாக கடல்சென்ற கண்ணீரும்

வான்கொண்டு பன்னீராய் வந்துதொழும் உன்பாதம்…


-ஆரன் 24.09.2020         


மின்மினிப் பூச்சிகள்


கதிரவ மாலையின் முத்துச்சிதறல்

ஈரநிலவின் கூந்தல்த் துளிகள்

விண்மீன்களின் உரசல் பொறி

வழிதவறிய அண்டவெளி மழலைகள்

தேவதைகள் தூவும் வைரப்பூக்கள்

இயற்கையன்னை ஒப்பனை அணிகள்

கார்காலத் திரை நடனம்

பனிதீண்டும் குளிரகற்ற தீத்தூரல்

கரும்பச்சைப் புடவையின் தங்கமணிகள்

நல்லிரவின் மாயக் கண்கள்

நீத்தார்களின் அந்திப் பயணம்

பேரமைதியின் மெளன ஒளி.

 

 

 

 

 

-ஆரன் 30.12.2020           

என் தாய்


 முத்திசைக்கு ஆணிணையாய் இளந்தாய்

தாய்மையிடம் பேரிளமை இழந்தாய்

முப்பொழுதும் பேரன்பால் வழிந்தாய்

போராட்ட வாழ்வினையே வலிந்தாய்

பெரும்பேராய் வாழ்ந்திடினும் தாழ்ந்தாய்

துன்பக்கடல் துச்சமென வாழ்ந்தாய்


பெண்ணடிமை இலக்கணங்கள் உடைத்தாய்

பெருஞ்சோக இலக்கியத்தைப் படைத்தாய்

வாய்முனைகள் வீழ்த்திடினும் முளைத்தாய்

நுனியுடைக்கப் பலவாராய் கிளைத்தாய்

வர்க்கநிலைப் பேதமின்றி உழைத்தாய்

விரலிடைவழிய மீதமுண்டுப் பிழைத்தாய்


முச்சேய்கள் உலகெனவே பித்தாய்

வளர்த்தெடுத்தாள் ஆழ்கடலின் முத்தாய்

ஏழ்மையிழும் கீழிறங்க மறுத்தாய்

சிறிதேனும் சுயநலத்தை மறந்தாய்

பசியா(ற்)ற குளிரிலும் வெந்தாய்

சிறிதெனினும் அடிவரையில் தந்தாய்


தன்பசிக்கு பெருங்கனவை வைத்தாய்

தன்னிரைப்பையை சரிபாதி தைத்தாய்

கனவினிலும் வறுமைக்கறை அழித்தாய்

சார்ந்தோர்க்கும் இன்னமுது அளித்தாய்

செருக்காக மேகலையை அழைத்தாய்

இதுகாரும் அவர்மனதில் நிலைத்தாய்


காலமெல்லாம் துயர்சுமக்க வந்தாய்

சிறகடிக்கப் பிரிவாலே நொந்தாய்

நிலையறிந்து மேகமெனக் கலைந்தாய்

பிள்ளைநிலைப் பொய்க்காமல் பொழிந்தாய்

சேய்வாட நல்லுறக்கம் களைந்தாய்

தன்பினிக்கு இன்முகமே மருந்தாய்


கோபமொழித் தேனெனவே உமிழ்ந்தாய்

திசையறியா தன்னிலையை இகழ்ந்தாய்

சேய்விளைய உதிரவுரம் தெளித்தாய்

காலச்சேறு நாற்படவே தெளிந்தாய்

கண்கொள்ளா கற்பனையின் கலைத்தாய்

கரைதீர கானல்களால் களைத்தாய்


கிளையுயர இன்பமுறக் களித்தாய்

இருள்மட்டும் வாழ்வெனவே கழித்தாய்

இணைசேரும் புதுவரவை கலந்தாய்

நீரினைபோல் தன்விருப்பைப் கடந்தாய்

வேராக மரம்செழிக்க மகிழ்ந்தாய்

பழச்சுவையும் வேர்க்கில்லை முகர்ந்தாய்


முப்போகம் தவறாமல் விளைந்தாய்

துருவங்கள் ஒன்றிணைய விழைந்தாய்

சேயறியும் மெளனமொழி மொழிந்தாய்

இளைப்பா(ற்)றும் கிள்ளைகளால் நெகிழ்ந்தாய்

இல்லங்களில் மகன்மகளாய் தவழ்ந்தாய்

அன்பளவை அன்னங்களால் அளந்தாய்


மழலைகளைப் பேரன்பால் வளைத்தாய்

சிரவகிடு தரைதொடவும் வளைந்தாய்

ஆண்டாண்டு காலங்கள் சுமந்தாய்

நிலைகொள்ளும் இடமெல்லாம் சூழ்ந்தாய்

சோர்வடைய மனக்குரலில் ஒலித்தாய்

பேருழைப்பால் கர்வமதை ஒழித்தாய்


வினையாற்றச் சிந்தையொளித் தாய்

வானுயர திகழ்கின்றாள் என் தாய்……தாய்…..தாயே


-ஆரன் 07.12.2020

( என் அம்மாவிற்கு… )


அல் அது


 அஃறினைக்கும் அற மென

வாழ்வதுவே நன்று.

எளியோர்க்குக் கடவுளாய் நீ

தாழ்வதுவும் நன்று.

இடைவந்தக் கடவுள் ஏன்

பலவாராய், நன்று.

அக்கடவுள் திசைக் கொன்றாய்

பிரியாமை நன்று.

அன்றி, வளர்ப்பதே கடவுளை

அகத்துள்ளே நன்று.

பலமற்றோர் தேவை உள்

கோவிலொடு நன்று.

நின்கடவுள் பொது வீதி

நில்லாமை நன்று.

பிறனிறையை எடைப் போட்டுக்

கொல்லாமை நன்று.

இறைவனுக்கு இடைத் தரகு

இல்லாமை நன்று.

கடவுளையே காப்போர் பின்

செல்லாமை நன்று.    
          

 –ஆரன் 21.05.2021 

வெளித் திண்ணை

தேகம் விறைத்தக் குளிர்

பேசத் துளிர்த்த தளிர்

வாசித்து முடித்தத் தாள்

சுவாசிக்க நிறைந்தத் தமிழ்

தோய்ந்து வரும் பார்வை

கோர்த்து வரும் பாவை

பருகி முடித்தக் கோப்பைகள்

பருவம் கடந்த இணை

தீர்ந்து விட்ட மழை

தீராத கனவுகள்…


-ஆரன் 23.02.20201

அன்னை போற்றி


 அன்னைத் தமிழ் போற்றிடுவோம்!

அன்னைத் தமிழ் போற்றிடுவோம்!!

வையகத்துப் பெருமக்கள்

அன்னை மொழி பேசி நிற்க,

மொழியன்னைத் தமிழ்பேச

பெரும்பேறு பெற்றவர் நாம்.

வாய்மொழிய அற்றிடினும்,

கரமெழுத நின்றிடினும்,

சிந்தையிலும் தமிழ் வளர்ப்போம்,

பல்லாண்டு தமிழ் வளர…


-ஆரன் 21.09.2020

ம சினக் குடி


 வந்தான் ஒதுங்கினேன்

இரசித்தான் வெட்கினேன்

சீண்டினான் எரிச்சலுற்றேன்

தடம்பதித்தான் தடுமாறினேன்

ஆக்கிரமித்தான் வழிமாறினேன்

பயிர்செய்தான் பசிகொண்டேன்

வலசைசெல்ல வழியில்லை

கால்தடுக்க நடைகுறைந்தேன்

முன்செல்ல மின்கொடுத்தான்

பின்செல்ல மண்ணெடுத்தான்

என்னிடத்தில் கால்வைக்க

என்மீதே நெருப்பெறிந்தான்

என்மீதுப் பிழையென்ன

என்மீதுப் பிழையென்ன

என்காடதிரக் கேட்கின்றேன்

என்மீதுப் பிழையென்ன?

புண்செய்தே புண்செய்தே

புவியாளும் மானுடனே

ஒழுக்கநெறி வழுவாத

பேருருவம் நானுகின்றேன்.

இயற்கையாய் இயற்கையெய்த

இயற்கையே இனியேனும்

இரக்கம் செய்…


-ஆரன் 23.01.2021

( மசினக்குடியில் யானை மீது நெருப்பெறிந்து கொன்ற சம்பவத்திற்காக எழுதியது )  

சூழ் நிலை

புதுத்தளிராய் செழித்து

பருவத்தென்றல் சீண்டி

சிலிர்த்துப் பூத்து

மதுரத் தேன்கொண்டு

மயக்கி இருள்கொள்ள

காய்த்தும் சிறைகொண்டாய்.

கனியக்கனிய குடைந்து

துளைத்துத் திளைத்து

மூச்சிறைத்து வெளியேறும்

மா வண்டாகிப் போனேன்.


-ஆரன் 28.01.2021


வெண்முகை

  

   மாலை 4.30 மணி, சென்னைப் புறநகர்ப் பகுதியில் புதிதாக உருவான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் சொந்தமான பூங்கா அந்தக் குடியிருப்புகளைச் சார்ந்தப் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளால் கலகலவென இருந்தது. நன்கு செலவழித்து ஏற்படுத்திய பூங்காவென்பது பலவகைப் உயர்வகைப் பூச்செடிகளாலும் புல்வெளிகளாலும் அழகுற விளங்கியது.

இதா செடிய புடிச்சி இழுக்காத, ஏய் புல்லுல எறங்காதிங்க என்றபடியே பெரியவர் வேலுச்சாமி ஒரு கையில் தடியை ஊன்றி நடைபாதையில் எச்சரிச்சபடியே சுத்தி வருவது தினசரி வாடிக்கை. பூங்காவின் காவலாளியான வேலுச்சாமி எழுபதைத் தாண்டிய முதியவர். பூங்காவை காலை மற்றும் மாலையில் திறப்பது, குப்பைகளைப் பொறுக்கித் தொட்டியில் போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது ஆகியவை பெரியவர் வேலுச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. தினமும் சிறுவர்களின் சேட்டைகளை கையாள்வதால் எப்போதும் வயதுக்குண்டான சிடுசிடுப்புடனே வலம் வருவார்.

அன்று புதிதாக ஒரு பெண்மனி தனது வலக்கையால் சுமார் பணிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுவனின் கையைப் பற்றி பூங்காவுக்குக் கூட்டி வந்தாள். அச்சிறுவனின் முகத்திலும் நடையிலும் மாற்றம் தெரியவே, வேலுச்சாமி கண் தெரியும் தூரத்தில் நின்று அச்சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அச்சிறுவன் மனவளர்ச்சிக் குறைபாடுடையவன் என்பதைக் கண்டுகொண்டார். அச்சிறுவனின் ஒரு கையை அவன் தாய் பிடித்திருக்க, மற்றொரு கை பாதி மடங்கி விரல்கள் குவித்து வெடுக் வெடுக்கென வீசியும், கால் பாதங்கள் தரையில் உரச குழைந்து குழைந்து நடந்து வந்தான். சிறிது நேரத்தில் அந்தப் பூங்காவில் இருந்த ஒவ்வொருவரும் அச்சிறுவனைப் பார்த்து அவர்களுக்குள் முனுமுனுத்துக் கொண்டனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அச்சிறுவனின் உடல்மொழியைக் கண்டு விளையாட்டை சில மணித்துளிகள் கைவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அச்சிறுவனின் தாய் இவை எதையும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அச்சிறுவன் தாயிடம் எதையோ உளரல் மொழியில் கூற அதற்கு அவன் தாய் பதில் கூறியபடியே நடத்தி வந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் உள்ள இருக்கையில் அமர வைத்தாள். அச்சிறுவனோ இருக்கையில் அமர மறுத்து அடம்பிடித்தான். வேறு வழியின்றி அவன் கையைப் பற்றியத் தாய் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூடவே சென்றாள். வேலுச்சாமி பூங்காவைச் சுற்றிச்சுற்றி வந்தாலும் அவர் பார்வை அவ்விருவரை நோக்கியே வலம் வந்தது. அன்று மாலை பூங்காவில் இருந்தவர்களின் நேரமும் அப்படியே கழிந்தது.

அன்று முதல் தினமும் அந்தத் தாய் மகனை அழைத்து வருவதும் இருட்டும் முன் போவதுமாக இருந்தாள்.  குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் எதோ அவர்களை அழையா விருந்தாளியைப் பார்ப்பது போலவே பார்த்தனர், ஏன் வேலுச்சாமியும் கூடத்தான். காரணம் அச்சிறுவன் ஒரு நிலையில் இருப்பதில்லை, முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், திடீரென பலமாக தாயிடம் கத்துவதும், கையில் கிடைப்பதை எடுத்து வீசுவதும் என ரகளை செய்தவண்ணம் இருப்பான். அவன் தாய் ஏமாந்த சமயத்தில் செடிகளை இழுப்பதும், பூக்களை பிய்ப்பதும் சமயத்தில் நிகழ்ந்துவிடும். இதை கவனிக்கும் வேலுச்சாமியை அத்தாய் முன்னமே கவனித்து மகனைக் கண்டித்து இழுத்து வருவாள். எதைப் பொறுத்தாலும் பொறுப்பார் பூக்களைப் பறிப்பதை மட்டும் அவரால் பொருத்துக் கொள்ள முடியாது. பூச்செடிகளுக்கு எப்பவுமே தனி சிரத்தை எடுத்து கவனிப்பார்.

நாட்கள் செல்லச் செல்ல குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவராக அச்சிறுவனை தாய் கூட்டிவருவதை வேலுச்சாமியிடம் ஆட்சேபிக்க ஆரம்பித்தர்கள். வேலுச்சாமிக்கும் அவ்விருவரையும் பார்க்கும் போதெல்லாம் எரிச்சல் கூடிக்கொண்டே வர ஆரம்பித்தது. அச்சிறுவன் பூங்காவில் இருந்து கிளம்பும் போது தாத்தா டாட்டா என்று உளரல் மொழியில் அவன் தாய் சொல்லாமலே கூறுவான். ம் டாட்டா டாட்டா என்று முகத்தைத் திருப்பிக்கொள்வார். இன்று எப்படியும் அந்தப் பெண்மணியைப் பார்த்து, இனி அச்சிறுவனை பூங்காவிற்கு அழைத்து வரக்கூடாதென கண்டிப்புடன் கூறிவிட எண்ணியவாரே செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.

ஐயா….ஐயா….. என பக்கத்து வீட்டுக்காரர் பூங்காவிற்குள் மூச்சிரைக்க ஓடிவந்து அழைக்க, என்னப்பா என்றவரிடம், உங்க வீட்ல கீழ விழுந்துட்டாங்க என்று சொல்லவும். உடனே குழாயை நிறுத்தி சுருட்டி ஓரமாய் போட்டுவிட்டு தடியை ஊன்றி ஊன்றி பூங்காவை விட்டு வெளியே வர, எதிரில் அச்சிறுவன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தவன் வேலுச்சாமியைப் பார்த்து, தாத்தா டாட்டா.. தாத்தா டாட்டா என்றான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி வீட்டை நோக்கி வேகமாகச் சென்றார்.

வேலுச்சாமியின் மனைவிக்கு பெரிதாய் ஒன்றுமில்லை, கணுக்காலில் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதால் மறுநாள் முதல் பூங்காவிற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வர குடியிருப்போர் சங்க நிர்வாகியிடம் அனுமதி வாங்கிக் கொண்டார். தினமும் தாமதமாக வர நேர்ந்ததால் வந்தவுடன் பூங்காவைச் சுற்றி வரும்போதெல்லாம் அழகியப் பூக்கலெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்து இரைந்துக் கிடக்கும். கோபத்தை அடக்கமுடியாமல் மீதம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அதட்டி விசாரித்தால் அவர்கள் எனக்குத் தெரியாது தாத்தா என்று கூறி அவசரமாய் மறுப்பார்கள். அங்கிருந்த பெண்களில் சிலர், எங்க பசங்களெல்லாம் இப்படிப் பண்ணமாட்டார்கள். அந்த லூசுப் பையனாத்தான் இருக்கும்னு சொல்ல. பெரியவர் வேலுச்சாமிக்கு கோபத்தில் முகம் சிவந்துவிடும்.

நாளாம் நாள் வேலுச்சாமி வீட்டுக்காரிக்கு நேரமே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு பூங்காவிற்கு கிளம்பி வந்தார். உள்ளே நுழைந்தவர் இடது பக்க வரிசையில் இருந்த அழகிப் பூச்செடிகளில் இருந்த பூக்களில் நிறைய கொத்தாக பிய்த்து கீழே இரைத்துப் போடப்பட்டிருந்தது. அவரால் விரும்பி வளர்க்கப்பட்ட செடிகளின் பூக்கள் சிதறிக் கிடந்ததும், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் பார்த்திருந்தால் என்ன பதில் கூறுவது என்றப் பதற்றமும், கூடவே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் குதூகலச் சத்தமும் அவருக்கு இதயத்துடிப்பை அதிகப்படுத்தின. கோபம் பொறுக்காமல் கீழே கிடந்த பூக்களைக் கொத்தாக கையில் சேர்த்து எடுத்துக் கொண்டு சில வினாடிகள் அந்த வண்ணப் பூக்களையே உற்றுப் பார்த்தவர், அந்தத் தாயும் பிள்ளையும் வரும் வீதியை நோக்கி தடியை ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்தார். அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைவுற்ற திருப்பத்தில் சென்றவர், எதிரே நடந்து வருபவர்களிடமெல்லாம் விசாரித்தபடி சென்றார். சரியாக பதில் கிடைக்காமல் மேலும் சென்றவர் எதிரில் வந்த கீரை விற்று வந்த பெண்ணை விசாரிக்க அவள் அச்சிறுவனின் விலாசத்தை விலாவாரியாக பெரியவருக்கு புரியவைத்தாள்.

ஒரு கையில் தடியும் மறுகையில் பூங்கொத்துடன் கீரைக்காரி சொன்ன அடையாளத்தை பின்பற்றி ஒருவழியாக ஓட்டு வீடுகள் நிறைந்த அப்பகுதியை வந்து சேர்ந்தார். ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த ஆளிடம் அச்சிறுவனின் அங்ககீனத்தைச் சொல்லி விசாரிக்க, அந்நபர் அடுத்த இரண்டு வீடுகளைத் தாண்டி இருக்கும் மின் கம்பத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே வாடகைக்கு விடப்பட்டிருக்கும் வரிசை வீடுகளில் கடைசி வீடு என அடையாங் காட்டினார்.

ஏற்கனவே கோபத்தில் இருந்தவருக்கு தன்னை இவ்வளவு தூரம் நடக்கவைத்த கோபமும் சேர கண்கள் சிவந்தபடி வரிசை வீடுகளின் நடைபாதைச் சந்தில் புகுந்து அரைகுறை வெளிச்சத்தில் தடியை ஊன்றி ஊன்றி வேகமாகச் சென்று கடைசி வீட்டின் வாசலுக்கு நேர் நின்றவர்.

வாசலுக்கு நேர் உள் சுவற்றுத் தரையில் அச்சிறுவனின் படம் ஓற்றை மண் விளக்கு ஒளியில் பெரியவர் வேலுச்சாமியைப் பார்த்தபடி இருந்தது. சிறிது நேரம் அசைவற்று நின்றார் வேலுச்சாமி. பக்கத்து வீட்டுப் பெண் யாரோ போனதைப் பார்த்து வெளியே வந்தவள், யாருங்க? அவங்கள ஆஸ்பத்திரிக்கு கூட்டிகிட்டு போயிருக்காங்க, வர நேரமாகும். இந்தாங்க சேர்ல உட்காருங்க ன்னு சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தவள். ஹிம். எடுத்து வளத்த பிள்ளை போனதையே தாங்காம நாளு நாளா உண்ணாம தூங்காம ஒடம்ப கெடுத்துக்கிட்டா புண்ணியவதி ன்னு சொல்லிக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.

            நின்றுகொண்டே இருந்த பெரியவர் வேலுச்சாமி மெதுவா குனிந்தபடியே வீட்டின் உள்ளே சென்று கையிலிருந்த பூங்கொத்தை அச்சிறுவனின் படத்தின் முன் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பி நடந்தார்.


-ஆரன்  19.04.2021