நான் ஆரன்.
தமிழ் பயிலும் மாணவன்.
வரையருக்க முடியாத காலத்தில் தோன்றிய மொழிக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆனால் சுமார் பல நூறு ஆண்டுகளாக சிதைந்து சிதைந்து இன்று இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் பேச்சிலும் எழுத்திலும் தமிழ் புழங்காத காலமாக உருமாறி இருக்கிறது. ஒவ்வொரு வாக்கியத்திலும் ஒரு சொல்லே தமிழ் மிஞ்சி இருக்கும் இன்றைய நம் மொழி நிலை கண்டு பதற்றமும் அச்சமும் தொற்றிக் கொண்டது. நம் மொழியை பாழ்படுத்திக் கொண்டிருப்பவர்கள் சீர்படுத்திக் கொண்டிருப்பவர்களை தாழ்வுணர்ச்சியில் தள்ளும் இழிநிலை இன்று. வெட்கக்கேடு.
ஆங்கில ஆண்டு 2015-2016 முதல் என நினைவு, அன்று முதல் என் தாய்த்தமிழே போதும் எனப்படுகின்ற அனைத்து இடங்களிலும், தொடர்பு சாதனங்களிலும் என்னால் முடிந்த அளவு பிற மொழி கலக்காமல் தமிழையே பயன்படுத்துவது என தீர்மானித்து பின்பற்றி வருகிறேன். மாற்றம் முதலில் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் இருந்து துவங்குவதுவே சிறந்த முன் முயற்சியாக இருக்கும் என ஆணித்தரமாக நம்புகிறேன். நம் தாய் மொழியை கலப்பில்லாமல் பேச, குறைந்தது நம் குடும்பத்தினரிடமாவது பிற மொழிக் கலப்பில்லாமல் பேச முயற்சி செய்வோம்.
நையாண்டி செய்வார்கள், வீண் வேலை என்பார்கள், முயற்சியை பொருட்படுத்தாது குறைகளை சுட்டிக்காட்டி எள்ளி நகைப்பார்கள். மொழி சோறு போடுமா என்பார்கள். அவர்களை புறந்தள்ளுங்கள். நம் செம்மொழியை காக்க செவ்வனே நமது கடமையைச் செய்வோம். ஒரு விழுக்காடு தமிழறிவைப் பெற்றவர் இரண்டு விழுக்காடு முன்னேறினாலே நூறு விழுக்காடு வளர்ச்சி என்பதை உள்ளத்தில் ஆழப் பதித்துக் கொண்டாலே போதும். நம் பாதை தெளிவு பெறும். ஒவ்வொரு நாளும் தமிழை ஒரு வார்த்தையையாவது கூடுதலாக பேசவோ, எழுதவோ உள்ளத்தில் உறுதியேற்று செயல்படுத்தினாலே வழிவழியாய் கடத்தப்பட்டு விடும்.
நம்மொழிக்காக
தற்காலத்தில் சில பெரியோர்கள் போராடி வரும் வேலையில், சிறு துரும்பாக என்னால்
இயன்ற சிறு முயற்சி இது. அவ்வப்போது என் எண்ணத்தில் தோன்றும் சிறுகதைகளையும்,
கவிதைகளையும் இத்தளத்தில் பதிவேற்றி வருகிறேன். படித்தவர்கள் தங்களுக்கு தோன்றும்
கருத்துக்களையோ அல்லது குறைகளையோ தாராளமாக வலைதளத்திலோ அல்லது எனது மின்னஞ்சல்
முகவரியிலோ தெரிவிக்கலாம். அவை என்னை பண்படுத்திக் கொள்ள உதவும்.
மேலும், நாம் வசிக்கும் பகுதியை பசுமையாய், குளிர்ச்சியாய் வைத்திருக்க உறுதி ஏற்போம். வாய்ப்பிருக்கும் இடங்களிலெல்லாம் உயிர்களுக்கு கனிகளைத் தரும் மரங்களையோ அல்லது நிழல் தரும் மரங்களையோ வளர்ப்போம். வருங்கால வழித்தோன்றல்களுக்கு பசியும் மாசும் அற்ற வையகத்தை விட்டுச் செல்வோம். நான் பின்பற்றி வருகிறேன். அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்கள் மீது மட்டும் நம் கவனத்தைக் குவிக்காமல். அனைத்து உயிர்களும் இன்புற்று வாழும் சூழலை உறுதி செய்வோம்.
மிக்க நன்றி
வணக்கம்
ஆரன்
நன்றி.
இப்பதிவுகளை இத்தளத்திற்கு கொண்டு சேர்க்கவும், இத்தளத்தில் பதிவேற்றி பராமரித்து
நல் ஆலோசனைகள் வழங்கி வரும் அன்பு சகோதரி திருமதி. அபிராமி சுப்பிரமணியம் அவர்களுக்கு…
0 comments:
Post a Comment