மயிலாடும் குயில்ச்சோலை
மண்ணுடையார்ச் சிறுகூட்டில்
பள்ளிமனம் மாறாது
மணிமணியாய் வளர்த்தவளே
பெற்றமனம் நெஞ்சுகனம்
பெருமூச்சாய் இளகிடவே
தேரில்வந்த மன்மதனை
கண்மூடி மணங்கொள்ள.
கொண்டவாழ்வு சாட்சியமாய்
ஊர்மெச்சும் கண்மணிகள்
வெள்ளி விலைபேசிடவே
குறைவற்ற பொன்மணிகள்
நின்னறிவை போற்றிடுவர்
ஊராரும் தமிழ்மகளே
திறனறிந்து அறியவில்லை
என்னாலும் உந்தனிணை.
பேரின்ப நெடுவாழ்வில்
நெஞ்சமெல்லாம் நெருப்பெரிய
கொள்ளைபசி கொண்டவரின்
கோரமுகம் வாட்டிடுதே
பெருங்காயம் பட்டிடுமா
மன்மதனும் அம்பெறிந்தே?
பாசவலை வீசிநிற்க
பாசிமட்டும் மிஞ்சிடுதே.
எவ்வாறு சுமந்திடுவாய்
மனச்சுமையை நெடுங்காலம்
மக்கள்கூட வாழ்ந்திடுவர்
பிழையில்லை நிகழ்காலம்
கைவீசும் உற்றாரை
எங்கனம்நீ இகழ்ந்திடுவாய்
அவரவர்க்குத் தலைச்சுமைகள்
மேல்நோக்கு புரிந்திடுவாய்.
மேற்கினிலே தவறவிட்ட
கதிரவன மலைவிழுங்கும்
களங்காதே திரும்பிநட
விடிவெள்ளி கிழக்கிலெழும்
பேரன்பால் நதியாக
கடல்சென்ற கண்ணீரும்
வான்கொண்டு பன்னீராய்
வந்துதொழும் உன்பாதம்…
-ஆரன் 24.09.2020
0 comments:
Post a Comment