மாலை 4.30 மணி, சென்னைப் புறநகர்ப் பகுதியில் புதிதாக உருவான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குச் சொந்தமான பூங்கா அந்தக் குடியிருப்புகளைச் சார்ந்தப் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளால் கலகலவென இருந்தது. நன்கு செலவழித்து ஏற்படுத்திய பூங்காவென்பது பலவகைப் உயர்வகைப் பூச்செடிகளாலும் புல்வெளிகளாலும் அழகுற விளங்கியது.
இதா
செடிய புடிச்சி இழுக்காத, ஏய் புல்லுல எறங்காதிங்க என்றபடியே பெரியவர் வேலுச்சாமி ஒரு
கையில் தடியை ஊன்றி நடைபாதையில் எச்சரிச்சபடியே சுத்தி வருவது தினசரி வாடிக்கை. பூங்காவின்
காவலாளியான வேலுச்சாமி எழுபதைத் தாண்டிய முதியவர். பூங்காவை காலை மற்றும் மாலையில்
திறப்பது, குப்பைகளைப் பொறுக்கித் தொட்டியில் போடுவது, செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது
ஆகியவை பெரியவர் வேலுச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலை. தினமும் சிறுவர்களின் சேட்டைகளை
கையாள்வதால் எப்போதும் வயதுக்குண்டான சிடுசிடுப்புடனே வலம் வருவார்.
அன்று புதிதாக ஒரு பெண்மனி தனது வலக்கையால் சுமார் பணிரெண்டு அல்லது பதிமூன்று வயது மதிக்கத்தக்க சிறுவனின் கையைப் பற்றி பூங்காவுக்குக் கூட்டி வந்தாள். அச்சிறுவனின் முகத்திலும் நடையிலும் மாற்றம் தெரியவே, வேலுச்சாமி கண் தெரியும் தூரத்தில் நின்று அச்சிறுவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அச்சிறுவன் மனவளர்ச்சிக் குறைபாடுடையவன் என்பதைக் கண்டுகொண்டார். அச்சிறுவனின் ஒரு கையை அவன் தாய் பிடித்திருக்க, மற்றொரு கை பாதி மடங்கி விரல்கள் குவித்து வெடுக் வெடுக்கென வீசியும், கால் பாதங்கள் தரையில் உரச குழைந்து குழைந்து நடந்து வந்தான். சிறிது நேரத்தில் அந்தப் பூங்காவில் இருந்த ஒவ்வொருவரும் அச்சிறுவனைப் பார்த்து அவர்களுக்குள் முனுமுனுத்துக் கொண்டனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அச்சிறுவனின் உடல்மொழியைக் கண்டு விளையாட்டை சில மணித்துளிகள் கைவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அச்சிறுவனின் தாய் இவை எதையும் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. அச்சிறுவன் தாயிடம் எதையோ உளரல் மொழியில் கூற அதற்கு அவன் தாய் பதில் கூறியபடியே நடத்தி வந்து சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பகுதியில் உள்ள இருக்கையில் அமர வைத்தாள். அச்சிறுவனோ இருக்கையில் அமர மறுத்து அடம்பிடித்தான். வேறு வழியின்றி அவன் கையைப் பற்றியத் தாய் அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் கூடவே சென்றாள். வேலுச்சாமி பூங்காவைச் சுற்றிச்சுற்றி வந்தாலும் அவர் பார்வை அவ்விருவரை நோக்கியே வலம் வந்தது. அன்று மாலை பூங்காவில் இருந்தவர்களின் நேரமும் அப்படியே கழிந்தது.
அன்று
முதல் தினமும் அந்தத் தாய் மகனை அழைத்து வருவதும் இருட்டும் முன் போவதுமாக இருந்தாள்.
குடியிருப்புவாசிகளுக்கு மட்டும் எதோ அவர்களை
அழையா விருந்தாளியைப் பார்ப்பது போலவே பார்த்தனர், ஏன் வேலுச்சாமியும் கூடத்தான். காரணம்
அச்சிறுவன் ஒரு நிலையில் இருப்பதில்லை, முரட்டுத்தனமாக நடந்துகொள்வதும், திடீரென பலமாக
தாயிடம் கத்துவதும், கையில் கிடைப்பதை எடுத்து வீசுவதும் என ரகளை செய்தவண்ணம் இருப்பான்.
அவன் தாய் ஏமாந்த சமயத்தில் செடிகளை இழுப்பதும், பூக்களை பிய்ப்பதும் சமயத்தில் நிகழ்ந்துவிடும்.
இதை கவனிக்கும் வேலுச்சாமியை அத்தாய் முன்னமே கவனித்து மகனைக் கண்டித்து இழுத்து வருவாள்.
எதைப் பொறுத்தாலும் பொறுப்பார் பூக்களைப் பறிப்பதை மட்டும் அவரால் பொருத்துக் கொள்ள
முடியாது. பூச்செடிகளுக்கு எப்பவுமே தனி சிரத்தை எடுத்து கவனிப்பார்.
நாட்கள்
செல்லச் செல்ல குடியிருப்புவாசிகள் ஒவ்வொருவராக அச்சிறுவனை தாய் கூட்டிவருவதை வேலுச்சாமியிடம்
ஆட்சேபிக்க ஆரம்பித்தர்கள். வேலுச்சாமிக்கும் அவ்விருவரையும் பார்க்கும் போதெல்லாம்
எரிச்சல் கூடிக்கொண்டே வர ஆரம்பித்தது. அச்சிறுவன் பூங்காவில் இருந்து கிளம்பும் போது
தாத்தா டாட்டா என்று உளரல் மொழியில் அவன் தாய் சொல்லாமலே கூறுவான். ம் டாட்டா டாட்டா
என்று முகத்தைத் திருப்பிக்கொள்வார். இன்று எப்படியும் அந்தப் பெண்மணியைப் பார்த்து,
இனி அச்சிறுவனை பூங்காவிற்கு அழைத்து வரக்கூடாதென கண்டிப்புடன் கூறிவிட எண்ணியவாரே
செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
ஐயா….ஐயா….. என பக்கத்து வீட்டுக்காரர் பூங்காவிற்குள் மூச்சிரைக்க ஓடிவந்து அழைக்க, என்னப்பா என்றவரிடம், உங்க வீட்ல கீழ விழுந்துட்டாங்க என்று சொல்லவும். உடனே குழாயை நிறுத்தி சுருட்டி ஓரமாய் போட்டுவிட்டு தடியை ஊன்றி ஊன்றி பூங்காவை விட்டு வெளியே வர, எதிரில் அச்சிறுவன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தவன் வேலுச்சாமியைப் பார்த்து, தாத்தா டாட்டா.. தாத்தா டாட்டா என்றான். அவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி வீட்டை நோக்கி வேகமாகச் சென்றார்.
வேலுச்சாமியின்
மனைவிக்கு பெரிதாய் ஒன்றுமில்லை, கணுக்காலில் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதால் மறுநாள்
முதல் பூங்காவிற்கு ஒரு மணி நேரம் தாமதமாக வர குடியிருப்போர் சங்க நிர்வாகியிடம் அனுமதி
வாங்கிக் கொண்டார். தினமும் தாமதமாக வர நேர்ந்ததால் வந்தவுடன் பூங்காவைச் சுற்றி வரும்போதெல்லாம்
அழகியப் பூக்கலெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்து இரைந்துக் கிடக்கும். கோபத்தை
அடக்கமுடியாமல் மீதம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அதட்டி விசாரித்தால் அவர்கள்
எனக்குத் தெரியாது தாத்தா என்று கூறி அவசரமாய் மறுப்பார்கள். அங்கிருந்த பெண்களில்
சிலர், எங்க பசங்களெல்லாம் இப்படிப் பண்ணமாட்டார்கள். அந்த லூசுப் பையனாத்தான் இருக்கும்னு
சொல்ல. பெரியவர் வேலுச்சாமிக்கு கோபத்தில் முகம் சிவந்துவிடும்.
நாளாம்
நாள் வேலுச்சாமி வீட்டுக்காரிக்கு நேரமே வேலையை முடித்துக் கொடுத்துவிட்டு பூங்காவிற்கு
கிளம்பி வந்தார். உள்ளே நுழைந்தவர் இடது பக்க வரிசையில் இருந்த அழகிப் பூச்செடிகளில்
இருந்த பூக்களில் நிறைய கொத்தாக பிய்த்து கீழே இரைத்துப் போடப்பட்டிருந்தது. அவரால்
விரும்பி வளர்க்கப்பட்ட செடிகளின் பூக்கள் சிதறிக் கிடந்ததும், குடியிருப்போர் சங்க
நிர்வாகிகள் பார்த்திருந்தால் என்ன பதில் கூறுவது என்றப் பதற்றமும், கூடவே விளையாடிக்கொண்டிருந்த
சிறுவர்களின் குதூகலச் சத்தமும் அவருக்கு இதயத்துடிப்பை அதிகப்படுத்தின. கோபம் பொறுக்காமல்
கீழே கிடந்த பூக்களைக் கொத்தாக கையில் சேர்த்து எடுத்துக் கொண்டு சில வினாடிகள் அந்த
வண்ணப் பூக்களையே உற்றுப் பார்த்தவர், அந்தத் தாயும் பிள்ளையும் வரும் வீதியை நோக்கி
தடியை ஊன்றி ஊன்றி நடக்க ஆரம்பித்தார். அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைவுற்ற திருப்பத்தில்
சென்றவர், எதிரே நடந்து வருபவர்களிடமெல்லாம் விசாரித்தபடி சென்றார். சரியாக பதில் கிடைக்காமல்
மேலும் சென்றவர் எதிரில் வந்த கீரை விற்று வந்த பெண்ணை விசாரிக்க அவள் அச்சிறுவனின்
விலாசத்தை விலாவாரியாக பெரியவருக்கு புரியவைத்தாள்.
ஒரு
கையில் தடியும் மறுகையில் பூங்கொத்துடன் கீரைக்காரி சொன்ன அடையாளத்தை பின்பற்றி ஒருவழியாக
ஓட்டு வீடுகள் நிறைந்த அப்பகுதியை வந்து சேர்ந்தார். ஒரு வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த
ஆளிடம் அச்சிறுவனின் அங்ககீனத்தைச் சொல்லி விசாரிக்க, அந்நபர் அடுத்த இரண்டு வீடுகளைத்
தாண்டி இருக்கும் மின் கம்பத்தைச் சுட்டிக்காட்டி, அங்கே வாடகைக்கு விடப்பட்டிருக்கும்
வரிசை வீடுகளில் கடைசி வீடு என அடையாங் காட்டினார்.
ஏற்கனவே கோபத்தில் இருந்தவருக்கு தன்னை இவ்வளவு தூரம் நடக்கவைத்த கோபமும் சேர கண்கள் சிவந்தபடி வரிசை வீடுகளின் நடைபாதைச் சந்தில் புகுந்து அரைகுறை வெளிச்சத்தில் தடியை ஊன்றி ஊன்றி வேகமாகச் சென்று கடைசி வீட்டின் வாசலுக்கு நேர் நின்றவர்.
வாசலுக்கு
நேர் உள் சுவற்றுத் தரையில் அச்சிறுவனின் படம் ஓற்றை மண் விளக்கு ஒளியில் பெரியவர்
வேலுச்சாமியைப் பார்த்தபடி இருந்தது. சிறிது நேரம் அசைவற்று நின்றார் வேலுச்சாமி. பக்கத்து
வீட்டுப் பெண் யாரோ போனதைப் பார்த்து வெளியே வந்தவள், யாருங்க? அவங்கள ஆஸ்பத்திரிக்கு
கூட்டிகிட்டு போயிருக்காங்க, வர நேரமாகும். இந்தாங்க சேர்ல உட்காருங்க ன்னு சொல்லிவிட்டுத்
திரும்பி நடந்தவள். ஹிம். எடுத்து வளத்த பிள்ளை போனதையே தாங்காம நாளு நாளா உண்ணாம தூங்காம
ஒடம்ப கெடுத்துக்கிட்டா புண்ணியவதி ன்னு சொல்லிக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.
நின்றுகொண்டே இருந்த பெரியவர் வேலுச்சாமி மெதுவா குனிந்தபடியே வீட்டின் உள்ளே சென்று கையிலிருந்த பூங்கொத்தை அச்சிறுவனின் படத்தின் முன் வைத்துவிட்டு அமைதியாகத் திரும்பி நடந்தார்.
-ஆரன் 19.04.2021
சாதாரண மனிதர்களின் மனவோட்டத்தை தெளிவாக படம் பிடுத்து காட்டி உள்ளீர்கள் .உங்கள் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது.
ReplyDelete