பெருந்தொற்றுப் பிணிக்காலம்
ஊரடங்கே விடையாக.
அரசு தந்த அவகாசம்
அதிகமில்லை ஒருநாளே.
நேற்றுவரை தோலுரசும்
அண்டையரும் அயலாராம்.
எதிர்கொள்ளும் அனைவருமே
பிணியுடனே தோன்றிடுவர்.
செய்தொழிலின் துயரநிலை
பணியாளர் மேலில்லை.
உறவினரும் தெரியவில்லை
உற்றார்கள் நினைவிலில்லை.
முகமூடி, கைமருந்தும்
சந்தேகப் பொருளாச்சு.
என்வீட்டு அலமாரி
மருந்துக்கடை போலாச்சு.
பயங்கொண்டு இல்லமது
சிறையென்று வாழ்ந்திடவே.
பட்டியலும் பெருசாச்சு
நேரமது சிறுசாச்சு.
நபர்க்கொன்றாய் பிடித்ததையே
வகைவகையாய் சமைத்திடவே.
கைகொள்ளும் பணங்கொண்டு
பைகொள்ளும் பொருள்வேண்டி.
கடைகண்ட பேர்களெல்லாம்
கண்காணா பேய்க்கஞ்சி.
சுயநலமாய் முண்டிடுவர்
அதிலொருவன் நானானேன்.
விலையொன்றும் கேட்கவில்லை
பொருட்கொண்டால் போதுமென.
கண்டதெல்லாம் பைநிறைத்து
வெற்றிக்கொண்ட வேந்தனைப்போல்.
வண்டியிலே திரும்புகிறேன்
பாதிவழி மீதியுண்டு.
இல்லத்திலே பொருள்சேர்க்க
மழைவந்து தடையாச்சு.
கண்ணெட்டும் தூரத்திலே
நிழற்க்குடையும் வரமாச்சு.
உள்சென்ற என்கண்கள்
மிரட்சியிலே விரிவாச்சு.
உள்ளிருக்கும் மக்களெல்லாம்
கதியற்றோர் என்றுணர்ந்தே.
முகமூடி சரிசெய்தேன்
முகமெல்லாம் வேர்க்கிறதே.
கந்தலாடை கொண்டவர்க்கு
புத்திநிலை நேரில்லை.
கூன்கொண்ட கிழவிகூட
யாருமற்றோர் வரிசையிலே.
உடலூனம் சிலபேர்க்கு
இவர்நடுவே என்நிலையும்.
மூச்சிழுக்கப் பயந்தபடி
வெளியேறக் காலிழுக்க.
இவர்நடுவே என்நிலையும்.
மூச்சிழுக்கப் பயந்தபடி
வெளியேறக் காலிழுக்க.
தொப்பலாக நனைந்தநடு
வயதுடைய ஆணுருவம்.
வண்டியிலே கொண்டுவந்த
பைகளுடன் உள்நுழைந்து.
அன்னமதை ஏந்துகிறார்
நீர்வழியும் கைகளுடன்.
ஆர்வமுடன் பெற்றனரே
நீர்வழியும் கண்களுடன்.
அலைபேசி ஒலிக்கிறது
மறுமுனையில் தன்வீட்டார்.
இன்னுஞ்சிலர் பசிபோக்கி
விரைந்திடுவேன் வீடென்றார்.
அன்னமிட்ட அன்பரிடம்
அன்புடனே பெயர்க்கேட்டேன்.
கணிவுடையக் கண்களுடன்
தலையாட்டி மறுத்திட்டார்.
சிலநொடியில் சுட்டதென்னை
சுயநலமும் சிந்தையிலே.
முழுநீலப் பெருமூச்சில்
மெய்நனைய நான்கரைந்தேன்.
-ஆரன் 04.06.2021
0 comments:
Post a Comment